கால்நடை பராமரிப்பு :: எருமை மாடுகள் :: தீவனப் பராமரிப்பு முதல் பக்கம்

தீவனப் பராமரிப்பு

எருமைகள் அசை போடும் கால்நடை இனத்தைச் சார்ந்தவை. இவை நார்ச்சத்து மிகுந்த பொருட்கள் உண்பதால் தான் இதன் பால் அதிக சத்துள்ளதாக விளங்குகிறது. எருமையின் வயிறு செல்லுலோஸ் போன்ற கடினமான உணவுகளையும் செரிக்க வல்லது. எருமை மாடுகள் முதலில் உணவை விழுங்கிவிடுகின்றன. பின்பு மீண்டும் வாய்க்கு எடுத்து வந்து அசை போட்டு பின்பு உள்ளே அனுப்பிச் செரித்துக் கொள்கின்றன. எனவேதான் எருமைகளால் நன்கு செரிக்க முடிகின்றது.
           
உணவானது விழுங்கியவுடன் முன்வயிற்றுப் பகுதிக்கு சென்றுவிடுகிறது. அங்கே பிராண வாயு (ஆக்சிஜன்) இருப்பதில்லை. அங்குள்ள பாக்டீரியா, புரோட்டோசோவா மற்றும் பூஞ்சைகள் போன்றவை இந்த உணவைத் தங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்காக உடைத்துப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த உணவு வாயினால் அசை போட்டு அரைக்கப்பட்டு எவ்வளவு நேரம் வயிற்றில் செரிக்கப்படுகிறது என்பது அதன் அளவு, வடிவத்தைப் பொறுத்தது. எருமைகள், பசுமாடுகளை விட மெதுவாகவே செரித்த பொருளை, நன்கு உறிஞ்சிப் பயன்படுத்திக் கொள்கின்றன. அமில காரத்தன்மை 6-7 வரை இருக்கும். இது உணவு உண்ணும் நேரத்தைப் பொறுத்து வேறுபடலாம்.
           
உணவானது செரிக்கப்பட்டு, புரதம், கார்போஹைட்ரேட் தாதுக்கள், கொழுப்பு மற்றும் நீர்ச்சத்தாக மாற்றுகின்றன. மேலும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்றவை வெளியேற்றப்படுகின்றன. கொழுப்பு அமிலங்கள், பியூட்ரிக் அமிலங்கள், அம்மோனியாவுடன் சேர்ந்து வயிற்றில் உறிஞ்சப்படுகின்றன. இவை இரத்தத்துடன் கலந்து தேவையான பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நிறைய உலர் தீவனமும், குறைந்த அடர்த் தீவனமும் கொடுத்தல்   வேண்டும்.

புரதம்

புரதமானது வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகளால் வளர்சிதை மாற்றங்களுக்காக  அமினோ அமிலங்களாக மாற்றப்பட்டு செரிக்கப்படுகிறது. இந்த நுண்ணுயிர்ப் புரதமானது வாயு நொதிகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வயிற்றில் உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் மூலமாக கல்லீரலுக்கு கடத்தப்படும் அம்மோனியா, யூரியாவாக மாற்றப்படுகிறது. ஏதேனும் புரதப் பற்றாக்குறை ஏற்பட்டால் யூரியா, நுண்ணுயிரிகளால் புரதமற்ற நைட்ரஜனாக எடுத்துக் கொள்ளப்பட்டு புரதத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு நைட்ரஜன் நன்கு      பயன்படுத்திக்  கொள்ளப்படுகிறது.

நுண்ணுயிர்த் தாக்குதலைத் தாங்கும் வகையில் புரதம் இருக்கவேண்டும். இது மாற்றுவழிப் புரதம் எனப்படும். இந்தப் புரதமானது சிறுகுடல், பின்வயிற்றுப் பகுத போன்ற நொதிகள் உள்ள பகுதியில் மட்டுமே செரிக்கப்படுகிறது. இவ்வகைப் புரதங்கள் சில அடர் தீவனமாகவும் கிடைக்கிறது. நிறைய பால் உற்பத்தி செய்யும் எருமைகளுக்கு இதை வழங்கலாம்.

கார்போஹைட்ரேட்

இவை எருமைகளில் முக்கிய சக்திக்கு ஆதாரம் ஆகும். கார்போஹைட்ரேட், சர்க்கரைகள் ஸ்டார்ச் மற்றும் நார்ப் பொருட்களிலிருந்து கிடைப்பவை. நார்ச்சத்தில் உள்ள செல்லுலோஸ், லிக்னின் போன்றவை செல் சுவரின் பாகங்கள் ஆகும். ஸ்டார்ச் ஆனது வாயு நொதிகளால் செரித்துவிடும். சாதாரண விலங்குகளை விட அசை போடும் மிருகங்கள் நார்ப் பொருட்களை செரிக்க அதிக நேரம் எடுக்கின்றன. எனினும் மர நார்ப்பொருட்கள் செரிக்கப்படாது. எருமைகளில் செரிக்கும் திறன் பிற கால்நடைகளை விட, 5-8 சதவிகிதம் அதிகம்.

கொழுப்பு

எருமைகளுக்கு கொழுப்பு அதிகமாக தேவைப்படுவதில்லை. தீவனங்களில் இருந்தாலும் இது நுண்ணுயிரிகளால் அழிக்கப்படுகிறது. கரையாத கொழுப்பு அமிலங்களும் ஹைட்ரோலைஸ்டு மூலம் கரையும் அமிலங்களாக மாற்றப்படுகிறது. எனவே தான் அசை போடும் மிருகங்களில் உடல் எடையின் கொழுப்பும் பால் கொழுப்பும் ஒரே அளவு அமைந்துள்ளன. செரிக்காமல் முன் வயிற்றில் விடப்பட்ட கொழுப்புகளும் கீழ் குடலில் செரித்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால்  இது பாலின் தன்மையை மாற்றி விடும். தேவையற்ற கொழுப்பானது குடலில் உள்ள நுண்ணுயிர்களை குறைப்பதால் நார்ப்பொருட்களின் செரிமானம் தடைபடுகிறது. எனவே தேவையான சத்து கிடைக்காமல் போகலாம்.

ஊட்டச்சத்து தேவை

நல்ல இலாபம் பெற கால்நடை வளர்ப்பில் கால்கடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.  தவறான தீவனத்தால் நோய்த் தொற்று, உற்பத்திக் குறைவு போன்ற பொருளாதார இழப்புகள் நேரிடலாம். எருமைக்குத் தேவையான உணவை சரியாகத் தெரிந்து வைத்திருந்தால் தீவனப் பராமரிப்புச் செலவைக்குறைக்க இயலும். இல்லையெனில் நிறைய தீவன சேதாரம் ஆகும். எருமைகளுக்கும் பெரும்பாலும் கால்நடைகளைப் போன்றே தீவனத் தேவை இருப்பதால் மாடுகளுக்கும் கொடுக்கப்பட்ட அட்டவணையை உபயோகிக்கலாம்.

ஆற்றல் / சக்தி

கார்போஹைட்ரேட் நிறைந்த நார்ச் சத்துப்பொருள்கள், ஸ்டார்ச் மற்றும் சிறிது கொழுப்பு போன்றவையே ஆற்றல் அழிப்பவை. இதில் எருமைகளுக்கு உலர் தீவனங்களே மலிவான சிறந்த தீவனமாகும். பரிமாண ஆற்றல் மூலம் எருமைகளின் உணவு விகிதத்தைக் கணக்கிடலாம். பரிமாண ஆற்றல் என்பது கால்நடைகள் வளர்ச்சி, பராமரிப்பு, பால் உற்பத்தி போன்றவற்றிற்குத் தேவையான ஆற்றலாகும். மொத்த ஆற்றலில் பெரும்பகுதி மீத்தேன் மூலமாகவும், உஷ்ணத்தை ஒழுங்குபடுத்துதலிலும் ஆற்றல் வீணாகிறது.

ஆற்றலானது கலோரி மூலம் அளிக்கப்படுகிறது. கலோரி + 4.18 ஜீல் பொதுவாக மெகா கலோரி அல்லது மெகா ஜீல் (1 மெகா கலோரி + 1 மில்லியன் கலோரி ஜீல்) மற்றொரு அளவை “மொத்த செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் எனப்படும். இது கார்போஹைட்ரேட், கொழுப்பை அளவிட பயன்படுகிறது. இவை கி.கி (அ) கிராம் அலகில் அளவிடப்படுகின்றன.

உணவின் ஆற்றல் அளவு பாதுகாக்கப்பட்ட கொழுப்பை சேர்ப்பதால் செரித்தலை குடலுக்குக் கொண்டு வருவதன் மூலம் அதிகரிக்கப்படுகிறது. அவ்வாறு குசம்பப்பூ எண்ணெய் 1 கி.கி பயன்படுத்தினால் ஊட்டச்சத்து அதிகரிக்கப்படுகிறது.

புரதம்

வளர்ச்சி, திசு புதுப்பித்தல், பால் உற்பத்தி போன்றவற்றிற்கும் புரதம் தேவைப்படுகிறது. பயறு வகைத் தாவரங்கள், தானியங்கள், எண்ணெய் வித்துப் புண்ணாக்குகள் புரதச் சத்து மிகுந்தவை. புரதம் பண்படாத புரதம் கி.கி (அ) கிராமில் அளக்கப்படுகிறது.

வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள்

  • தாது உப்புக்கள் உடலின் பல வேலைகளுக்குத் தேவைப்படுகின்றன. முக்கியத் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், பால் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் இவை நரம்புச் செயல்பாட்டிற்கு அவசியமானவை. உடலின் வளர்சிதை மாற்றத்தின் ஆற்றலுக்கு பாஸ்பரஸ் இன்றியமையாதது. ஏடிபி எனப்படும் அடினைன் டிரை பாஸ்பேட், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை 2 சதவிகிதம் என்ற விகிதத்தில் தேவைப்படுகிறது. கால்சியம்  சிறுகுடலில் இருந்து செரிக்கப்பட்ட சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.
  • உப்பு, சோடியம், பொட்டாசியம் குளோரைடுடன் இணைந்துள்ளன. தீவனத்தில் உள்ள இந்நுண்ணுயிர்ச்சத்துக்கள் உடல் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும்.
  • வைட்டமின் இவை முழு உடல் செயல்பாடுகளுக்கு அவசியம். வைட்டமின்கள் நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுகின்றன. வைட்டமின் பி, சி, கே மற்றும் டி போன்றவை அதிகளவு தேவைப்படுவதில்லை. வைட்டமின் பி நுண்ணுயிரிகள் (முன் வயிற்றில் இருப்பது) லாலும், கே குடல் உயிரிகளாலும் சி திசுக்களிலும் உருவாக்கப்படுகிறது. புறஊதாக்கதிர்கள் கால்நடைகளின் தோலில்படும் போது வைட்டமின் டி உருவாகிறது. வைட்டமின் ஏ மற்றும் இ, விலங்குகளால் தயாரித்துக் கொள்ள இயலாது. பதப்படுத்திய தீவனங்கள், பசும்புற்கள், இலைகள், கேரட், பயறுகள் போன்றவை வைட்டமின் ஏ வைப் பெற்றுள்ளன.

தாது / வைட்டமின் கலவை

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை பொடியாகவோ அல்லது கால்நடைகள் நக்கிச் சாப்பிடுமாறு கல் வடிவிலோ தாதுக் கலவையை அளிக்கலாம். இந்த விட்டமின்கள் சூரிய ஒளியில் நேரடியாக வைக்கப்படும் பொழுது பாதிக்கப்படும். எனவே இதை கவனமாகப் பாதுகாப்பது அவசியம்.

நீர்

உடல் வெப்பநிலைக் கட்டுப்பாட்டிற்கும், பால் உற்பத்தி, இரத்தப் பிளாஸ்மாக்களை பராமரிக்கவும் நீர் இன்றியமையாத தேவை ஆகும். உடல் வெப்பம் பராமரிப்பு கால்நடை அருந்தும் நீரைப் பொறுத்தது. 3 வழிகளில் கால்நடைகளுக்கு நீர் கிடைக்கின்றது.

  • குடிநீர்
  • தீவனத்தில் உள்ள நீர் (பசும்புல்)
  • செரிமானத்திலிருந்து கிடைக்கும் நீர்

குடிநீரானது எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும். வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் நீர் சிறிதளவே இருக்கும். பதப்படுத்தப்பட்ட பசுமையான தீவனங்களில் நீரின் அளவு அதிகமாக (70 சதவிகிதம்) இருக்கும்.
எருமையின் நீர்த்தேவையானது கீழ்வருவனவற்றைச் சார்ந்தது

  • உணவு
  • தட்பவெப்பநிலை (ஈரப்பதம், வெப்பநிலை)
  • உடல் செயல்கள் (வளர்ச்சி, சினைத் தருணம், பால் உற்பத்தி)

மாடுகளை விட எருமைகள் பொதுவாக அதிக நீர் அருந்துகின்றன. அருந்தும் நீரளவு குறையும் போது, உலர்த்தீவனம் எடுக்கும் அளவும் குறைவதால் பால் உற்பத்தி குறையும்.

நீர்ன் உப்புத்தன்மை எருமைக் கறவை மாடுகளில் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. நீரில் உப்பின் அளவு லிட்டருக்கு 5 கி வரை இருக்கலாம். இது அதிகமானால் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

தீவனம்

எருமையின் முக்கியத் தீவனங்கள் (புற்கள்) பயறுவகைத் தாவரங்கள் மற்றும் வைக்கோல் தீவனமானது நேரடியாக மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றோ அல்லது புற்களை வெட்டி எடுத்து வந்து அளித்தல், வைக்கோல், பதப்படுத்தப்பட்ட தீவனமாக அளிக்கலாம். மேலும் உலர் தீவனங்கள், தானியங்கள், அடர் தீவனமாகவும், எண்ணெய் வித்துப்பயிர்களின் புண்ணாக்கு, கரும்பின் தோகை போன்றவற்றையும் அளிக்கலாம். தானியங்கள், அடர் தீவனங்கள் வளர்ச்சி, சினை மற்றும் பால் உற்பத்தி போன்றவற்றிற்காக மட்டுமே இருக்கவேண்டும். அதே போல் நார்ச்சத்தற்ற தீவனங்களைத் தொடர்ந்து அளித்து வருவதால் அதன் செரிப்புத் தன்மை மாறி பசியின்மை, எடை இழப்பு மற்றும் பால் அளவு குறைதல் போன்ற விளைவுகள் நேரும்.

உலர்த்தீவனமானது நல்ல தரத்துடன் ஊட்டசத்துள்ளதாகவும் தூய்மையானதாகவும் இருக்கவேண்டும்.

உலர்தீவன வகைகள்

பலவகை புற்கள் இவ்வகையில் அடங்கும். (லுயூசர்ன்) குதிரைமசால், கொழுக்கட்டைப்புல், மருத்துவப் பயறு வகைகள் போன்றவை நைட்ரஜனை வேர்களில் நிலைப்படுத்துகின்றன. அதாவது இவை பாக்டீரியாக்களின் உதவியால் நைட்ரஜனை தயாரித்துக் கொள்வதால், மண்ணிலுள்ள நைட்ரஜனைச் சார்ந்திருப்பதில்லை. இவ்வகைத் தாவரங்கள் புற்களை விட அதிக புரதத்தைப் பெற்றுள்ளன. குதிரை மசால் போன்ற தாவரங்களின் பால் உற்பத்திக்குத் தேவையான கால்சியம், வைட்டமின் மற்றும் கரோட்டீனைப் பெற்றுள்ளன.

அதே போல் இலை தழைகள் கொண்ட மரங்களான லுயூகேனியா, கிளைரிசிடியா, செஸ்பேனியா போன்றவையும்  சிறந்த தீவனப் பயிர்கள் ஆகும். மேலும் இந்த பயறு வகைத் தாவரங்கள் எதிர் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் செரிக்கும் திறனைக் குறைப்பதால் குறைந்த அளவே உட்கொள்ளும். எனவே மரவகைத் தீவனங்களின் இலைகளை பறித்து 50 சதவிகிதம் அளவு மட்டுமே எடுத்து மற்ற தீவனங்களுடன் கலந்து கொடுக்கவேண்டும். மரக்கிளைகளை 6-10 வாரங்களுக்கு ஒரு முறை வெட்டி விடுதல் நன்று.

அறுவடை செய்யப்பட்ட உலர் தீவனங்கள்

தாவர வளர்ச்சியின் ஆரம்பத்தில் புரதம், சர்க்கரை (ஆற்றல்) அதிகமாகவும் லிக்னின் அளவு குறைவாகவும் இருக்கும். அத்தாவரம் முதிர்ச்சி அடைய அடைய லிக்னின் அதிகமாகவும், சர்க்கரை மற்றும் புரதம் குறைவாகவும் இருக்கும். அப்படி இருக்கும் பயிர்களே தரமான தீவனங்கள் ஆகும்.

மேய்ச்சலுக்கு விடும் போது கால்நடைகள் புற்களை தரை வரை அதிகளவு  மேய்ந்து விடக்கூடாது. ஏனெனில் மிகக் கீழே மேய்ந்து விட்டால் பின்பு மறுபடி புற்கள் வளர்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.

மேலும் மண் அரிப்பிற்கும் அது வழிகோலும். அதே சமயம் சரியாக மேயாவிட்டாலும் மறுமுறை மேய்ச்சலுக்கு முன் புற்கள் வெகு விரைவில் உயரமாக வளர்ந்து விடும். நன்கு வளர்ந்து முதிர்ந்த புற்களில் புரத அளவு குறைவாகவே இருக்கும். மேலும் செரித்தலும் கடினம்.

உலர்த்தீவன நேர்த்தி

தீவனப் பயிர்களைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அரைத்து, சிறு கட்டிகளாக உருட்டி உருவமைத்துக் கொடுத்தால் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் இருக்கும். இதன் தரத்தை உயர்த்த காரம் அல்லது அம்மோனியாவுடன் நேர்த்தி செய்யலாம். அம்மோனியா கலந்த, துண்டுகளாக்கப்பட்ட வைக்கோல் சில சமயங்களில் பால் குறைந்த மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

அடர் தீவனங்கள்

அடர் தீவனம் என்பது சிறிதளவு தீவனத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் அடர்ந்துள்ளதைக் குறிக்கும். நம் நாட்டில் அடர் தீவனம் என்பது எண்ணெய் வித்துப் பயிர்களின் புண்ணாக்கு ஆகும். எண்ணெய் பிழியப்பட்டபின் உள்ள சக்கையைத் தீவனமாகப் பயன்படுத்துகின்றனர். இதில் புரதம் அதிகளவு உள்ளது.

பிற தீவனங்களான யூரியா, கரும்புச் சக்கை போன்றவையும் நுண்ணுயிரிகளுக்கு நைட்ரஜன் ஆதாரமாகப் பயன்படுகின்றன. கரும்பு புளித்துப் போவதால் குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்கு நல்ல ஆற்றலைத் தருகிறது. பல அடர் தீவனங்கள் தயார் செய்யப்பட்டு உடனடி பயன்பாட்டிற்காக விற்கப்படுகின்றன. இவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

தானிய வகைகள்

பார்லி, கோதுமை, ஓட்ஸ், சோளம், கம்புச் சோளம் போன்றவை. எருமைக்கு சிறந்த தீனி. இவற்றை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

தன்னிச்சையான உணவூட்டம்

தன்னிச்சையான உணவூட்டம் என்பது ஒரு நாளொன்றுக்கு எருமை உட்கொள்ளும் தீவனம் ஆகும்.  இது உடல் எடை சதவீதம் அல்லது உலர் எடை கி.கிராமில் அளவிடப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள், பசும்புல், உலர் தீவனம் போன்ற தீவனங்கள் சரியான அளவு உணவு அளிக்கப்பட்டபின், அதில் எந்த அளவு எருமை உட்கொள்கிறதோ அது அதன் ஒரு நாள் உணவூட்டமாகக் கணக்கிடப்படுகிறது.

இளம் எருமையின் ஒரு நாள் தீவனம் அதன் உடல் எடையில் 2.2-2.5 சதவிகிதம் ஆகும். அது சிறிதளவு வைக்கோல், அதிக அளவு பசும்புல் மற்றும் அடர்தீவனங்கள் அடங்கியதாக இருக்கவேண்டும். எருமைகள் அதன் உடல் எடையில் 3 சதவிகிதம் வரை உணவு எடுத்துக் கொள்ளும். தீவனத்தில் வைக்கோல் அதிக அளவு இருப்பதும் புரதம் 6 சதவிகிதம் குறைவாக இருந்தாலும் எருமையின் உணவூட்டம் குறையும்.

கறவை எருமைகளின் தீவனப் பராமரிப்பு

கறவை எருமைகளுக்கு சிறந்த தீவனம் அளிக்கவேண்டும். ஏனெனில் பால் உற்பத்தி என்பது அதிக ஆற்றலை செலவழிக்கும் செயலாகும். அதுவும் முதல் மாத கறவைகள் சரியாகத் தீவனம் எடுக்காவிடில் உடல் எடை குறையும். எருமைகளின் கொழுப்பே பாலாக மாறுகிறது. எனவே புரதம் ஆற்றல், வைட்டமின் மற்றும் தாதுக்கள் சரியான விகிதத்தில் கலந்து தூய சுவை மிகுந்த தீவனம் அளிப்பதே பால் உற்பத்தி, உடல் எடை, ஆரோக்கியம் போன்றவற்றை அதிகரிக்க சிறந்த வழியாகும். அட்டவணை 6ல் கறவை எருமைகளுக்குத் தேவையான தீவனத் தேவை பட்டியலிடப்பட்டுள்ளது.

வழக்கமாக பயிர் செய்யும் காலங்களில் மற்றும் மழைக்காலங்களில், தீவனங்கள் அதிகமாக இருக்கும். அதுவே வறண்ட காலங்களில் தீவனம் சரியாகக் கிடைக்காது. எனவே கிடைக்கும் காலங்களில் தீவனத்தை வைக்கோல், தட்டு போன்று பதப்படுத்திப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பால் கறக்கும் கறவை எருமைகளுக்கான தீவனத் தேவை கணக்கீடு

எருமைகளுக்கென தனித்தீவனப் பட்டியல் ஏதும் இல்லை. எனினும்  கீழ்க்கண்ட அட்டவணை 1ல் கறவை எருமைகளுக்கான தீவன அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையானது மாடுகளின் தீவன அட்டவணையை 3ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. எருமையின் தீவன அளவை நிர்ணயிக்க அதன் உடல் எடை மிக முக்கியம். வாரத்தில் மூன்று முறை எருமையின் எடையை அளந்து சராசரி எடையைக் காணுதல் வேண்டும். இதே போல் பால் உற்பத்தி அளவு மற்றும் பாலின் கொழுப்புச் சத்தை 3 முறை பார்த்து சராசரி காணவேண்டும். இவ்வாறு கண்ட உடல் எடை, பால் அளவு, கொழுப்புச் சத்து போன்றவற்றின் அடிப்படையில் தீவன அளவு கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 1 : கறவை எருமைகளுக்கான தீவன அட்டவணை

உடல் எடையைப் பொறுத்து தீவனம்
வளர்சிதை மாற்ற எரிசக்தி
(ME IN Meal)
மொத்தம்
(கி.கி)
மொத்த பண்படாத
புரதம்
கால்சியம் பாஸ்பரஸ்
கிராம்
450 கிகி 13.0 3.4 341 18 13
500 கிகி 14.2 3.7 364 20 14
550 கிகி 15.3 4.0 356 22 16
600 கிகி 16.3 4.2 406 24 17
4சதவிகிதம் சரி செய்யப்பட்ட பாலின் தேவைக்கு 1.24 0.32 90 2.73 1.68

எருமையானது மிக அதிக எடையுடன் காணப்பட்டால் மேற்கண்ட அட்டவணை அளவில் 10 சதவிகிதம் குறைத்தும், மிகக் குறைந்த எடையுடன் காணப்பட்டால் 10 சதவிகிதம் தீவனம் அதிகமாகவும் வழங்கலாம்.

இவை தவிர சுற்றுப்புறங்களில் வளர்க்கப்படும் பயிர்களையும் தீவனங்களில் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு பண்ணையில் வளர்க்கும் தீவனப்பயிர்கள் உலர் எடை அளவு, ஆற்றல், புரதம், போன்றவை மற்றும் கால்சியம், பாஸ்பரஸை ஆய்வகத்தில் ஆய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும்.
அட்டவணை

பொருளாதார ரீதியான தீவன ஊட்டம்

தீவனப்பயிர்
வளர்சிதை மாற்ற எரிசக்தி
(ME IN Meal)
செரிக்கப்படாத ஊட்டசத்துக்கள் (கி.கி) பண்படாத மொத்த புரதம் கால்சியம் பாஸ்பரஸ்
குதிரை மசால் 2.36 0.36 200 15.4 2.2
நேப்பியர் புல் 2 0.55 87 6 4.1
சைப்பிரஸ் 3.16 0.81 164 - -
ஓட்ஸ் 2.73 0.6 140 2 2
சோளம் 2.36 0.63 88 4.3 3.6
சோளம் (பதப்படுத்தியது) 2.14 0.58 62 3.4 1.7
மக்காச் சோளம் (பதப்படுத்தியது) 2.67 0.7 81 2.3 2.2
கோதுமை வைக்கோல் 1.51 0.44 0 1.8 1.2
ரேப்ஸீடு 2.93 0.76 390 7.2 11.4
பருத்தி புண்ணாக்கு 2.71 0.71 448 1.9 1.2
கோதுமை தவிடு 2.67 0.7 171 11.8 3.2
கரும்பு சக்கை (பாகு) 2.67 0.7 103 11 1.5
யூரியா 0 0 281 0 0

எருமைக் கன்றுகளின் தீவன ஊட்டம்

இந்தியாவில் கன்றுகளின் இறப்பு விகிதம் (30-40 சதவிகிதம்) அதிகம். இது சரியாக பால் வழங்கப்படாமை, காயங்கள், நோய்த்தாக்கம் போன்றவற்றால் ஏற்படுகிறது. கன்றுகளுக்கு சரியான தீவனமும், கவனிப்பும் அளித்துப் பராமரித்தல் இறப்பு விகிதத்தைக் குறைக்க உதவும்.

பிறந்த கன்றுக்கு சீம்பால் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். கன்று பிறந்த 12 மணி நேரத்திற்குள் சீம்பாலானது ஊட்டப்பட வேண்டும். கன்று உயிர்வாழத் தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சீம்பாலில் அடங்கியுள்ளன. சீம்பாலானது சுரக்கும் வரை அதாவது 3-4 நாட்களுக்கு கன்றுக்கு சீம்பால் தரப்படவேண்டும். கன்று ஊட்டியது போக மீதமுள்ள சீம்பாலை பீய்ச்சி வேக வைத்தோ அல்லது குளிர்விப்பானில் வைத்தும் பயன்படுத்தலாம். குளிர்விப்பானில் வைக்கும் போது சீம்பாலானது 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். லேக்டிக் அமிலம் மூலம் சீம்பால் ஆனது நொதிக்க வைக்கப்படுகிறது. இவ்வாறு நொதித்த பாலானது 2 வாரங்கள் வரை குளிர்விப்பானில் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.

Buffalo_calf_Feeding
கன்றுகளின் தீவன ஊட்டம்

தாய் எருமை கன்றை தன்னிடம் ஊட்ட அனுமதிக்கவில்லையெனில் பாலை பீய்ச்சி சிறிதளவு வெப்பநிலைக்கு (39 டிகிரி செல்சியஸிற்கு) காய்ச்சி சிறிது நேரம் வைத்து கன்றுக்கு அருந்தக் கொடுக்கலாம். சீம்பாலை எக்காரணம் கொண்டும்  கொதிக்க வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள நுண்ணுயிரிகள் அனைத்துதம் அழிந்துவிடும்.

கன்று தானாகவே தாயிடம் சென்று அடிக்கடி ஊட்டும். ஆனாலும் சிறிதளவே பால் குடிக்கும். எனவே பாலை கறந்து நாளொன்றுக்கு இரண்டு வேளையாவது நாமே காட்டுவது நல்லது.கன்றை வாளியிலிருந்து நீர் அருந்தப் பழக்கவேண்டும். இதற்கு வாளித் தண்ணீரினுள் கையைவிட்டுக் கன்றை அந்தக் கையை நக்குமாறும், ஊட்டுமாறும் பழக்கவேண்டும். இவ்வாறு நீர் அருந்தப் பழக்கினால் உணவூட்டமும் அதற்கு எளிதாக இருக்கும். கன்று பிறந்து 4-5 நாட்கள் வரை நீர் மற்றும் பால் அருந்தப் பழக்கவேண்டும்.

அட்டவணை 3

கன்றுகளுக்கான தீவனம்

வயது
(நாட்களில்)
தினமும் ஏறும் எடை செரிக்கக்கூடிய பண்படாத புரதம் செரிக்கக்கூடிய மொத்த ஊட்டச்
சத்துக்கள்
(ME IN Meal) கால்சியம்
கிராமில்
பாஸ்பரஸ் (கிராமில்) வைட்டமின்
(1000 / U)
வைட்டமின் டி
0.15 0.20 80 400 1.5 2.5 1.5 1.5 200
16-30 0.30 90 800 1.7 3.0 2.0 1.5 250
31-60 0.30 125 800 2.4 3.5 2.5 1.7 250
61-90 0.35 150 100 3.6 4.0 3.0 2.0 260

சீம்பாலை அடுத்து 15 நாட்கள் வரை கன்றின் உடல் எடையில் 1/8 பங்கு 1/10 பங்கு வரை தாய்ப்பால் வழங்கப்படவேண்டும். அதன் பிறகு சிறிது பாலுடன் சேர்த்து பிற உட்டச்சத்துக்களுடன் கூடிய அடர் தீவனம் அளிக்கப்படலாம். பாலை நிறுத்தி (திடீரென) உடனடியாக வெறும் அடர் தீவனம் மட்டும் கொடுத்தால், ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படலாம். நாளொன்றுக்கு இரு வேளை என்ற அளவில் கொழுப்பு நீக்கிய பாலும், தீவனமும் கலந்து அளிக்கலாம்.

இரண்டு வாரங்களுக்குப் பின்பு., பசும்புல், கலப்புத்தீவனம் போன்றவை (அட்டவணை 3ல் காட்டிய படி) அளிக்கலாம். இதுவே செரிமானத் திறனை அதிகப்படுத்தும். கீழ்க்காணும் அட்டவணைப்படி தீவனமிடும்போது முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு 0.35 கி.கி அளவு பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

 

வயது
(நாட்களில்)
முழு பால்
(எண்)
கொழுப்பு நீக்கிய பால் (லிட்டரில்) கலப்பு தீவனம் (கிராமில்) வைக்கோல்
(கிராமில்)
0-14 4 - - -
15-21 3.5 - 50 300
22-28 3.0 - 300 500
29-35 1.5 1.0 400 550
36-42 - 2.5 600 600
43-49 - 2.0 700 700
50-56 - 1.5 800 800
57-63 - 1.0 1000 1000
64-70 - - 1200 1100
70-77 - - 1300 1200
78-84 - - 1400 1400
85-91 - - 1700 1900
  • முதல் 3-4 நாட்கள் சீம்பால் கொடுக்கலாம்.
  • சிறிது சிறிதாக கொழுப்பு நீக்கிய பாலை பாலுக்கு பதிலாகக் கொடுத்துப் பழக்கவும்.
  • மற்றொரு முறையில் செவிலித்தாய் ஊட்டம் மூலமும் பால் அளிக்கச் செய்யலாம். இத்தாலி போன்ற நாடுகளில் 40 சதவிகிதம் எருமைக் கன்றுகளில் அதிக பால் தராத எருமைகள் அல்லது மாடுகளில் பால் ஊட்டம் செய்யப்படுகின்றன. இதனால் ஆட்செலவு குறைவதோடு, கன்றுக்கும் நல்ல பாலூட்டம் கிடைக்க ஏதுவாகிறது.

 

கன்றுக்களுக்கான கலப்புத் தீவனம்

தீவனப் பொருள்
அளவு
நசுக்கப்பட்ட பார்லி 50
கடலைப்புண்ணாக்கு 30 சதவிகிதம்
கோதுமைத் தவிடு 8 சதவிகிதம்
மீன்துகள் / கொழுப்பு நீக்கிய பால் பவுடர் / மாமிசக்கழிவு 10 சதவிகிதம்
தாதுக்கலவை 2 சதவிகிதம்
கரும்புச்சக்கை 5-10 கிகி
உப்பு 500 கிராம்

சோளம், கம்பு, ஓட்ஸ் போன்ற பயிர்களின் தட்டுக்களை வெறுமனே எதுவும் கலக்காமல் கொடுக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் ஏதும் கால்நடைகளுக்குக் கிடைப்பதில்லை. மாறாக யூரியா, கரும்புச் சக்கை, உப்பு போன்ற பொருட்களை சேர்த்து நேர்த்தி செய்து அளிக்கும் போது கால்நடைகளுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கின்றன. நேர்த்தி செய்த சோளத்தட்டை அளிக்கும் போது எருமைக் கன்றின் எடை 150-200 கி.கி வரை கிடைக்கிறது.

இளம் எருமைகளுக்கான தீவனத் தேவை

இளம் எருமையானது நல்ல ஊட்டச்சத்துக்களுடன் முறையாக கவனிக்கப்படவேண்டும். அப்போது தான் அதிலிருந்து ஆரோக்கியமான நல்ல எடையுள்ள கன்று கிடைக்கும். எல்லா விலங்குகளுக்கும், எல்லா காலங்களிலும் நிறைய தீவனம் அளிப்பது சாத்தியமில்லை. எனினும் பசுந்தீவனங்கள் கிடைக்கும் காலங்களில் நல்ல பராமரிப்பு அவசியம்.

இளம் எருமையை நன்கு கவனிக்க வேண்டும். அதன் உடல் எடையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவேண்டும். எடை சரியாக இல்லையெனில் தீவன அளவைச் சரி செய்யவேண்டும்.

இளம் எருமைகளுக்கு 4-7 கி.கிராம் பசுந்தீவனம் நாளொன்றுக்கு அளிக்கப்படவேண்டும். அதனுடன் தானிய வகைகள், அடர் தீவனம் போன்றவை அளிக்கலாம்.

அம்மோனியா கலந்த வைக்கோல் இருந்தால் அதைத் தரம் குறைந்த தீவனங்களுடன் கலந்து அளிப்பதால் அந்தத் தீவனங்களை கால்நடைகள் விரும்பி உண்ணும். பதப்படுத்தப்பட்ட தீவனங்களை கறவை மாடுகளுக்கு அளிக்கலாம்.
முதல் கன்று ஈனும் இளம் எருமையின் ஒரு நாள் தீவனம் என்பது 1-1.5 கி.கி உலர்  தீவனம், 3 கி.கி பசும்புல் மற்றும் 1 கி.கி அடர்  தீவனம் ஆகும்.

எருமைகளின் உடல் எடையை அதிகரிக்க வெறும் வைக்கோல் தீவனம் மட்டும் போதாது. வைக்கோலை அம்மோனியாவுடன் பதப்படுத்திப் பின்பு பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனத்துடன் மாற்றி மாற்றி அளிப்பதே நல்ல ஆரோக்கியமான எருமை வளர்ப்பிற்கு ஏற்றது.

பால் வற்றிய எருமை மாடுகளின் தீவனப் பராமரிப்பு முறை

பால் வற்றிய சினை எருமைகளுக்குக் கன்று ஈனும் 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே நல்ல முறையான தீவனப் பராமரிப்பு அவசியம். இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், முர்ரா இன எருமைகளில் நடத்திய ஆராய்ச்சியின் படி கன்று ஈனுவதற்கு 2 மாதம் முன்பு அட்டவணையில் காட்டிய உணவில் 125 சதவிகிதம்  அளவு தீவனம் கொடுக்கப்படவேண்டும். அப்போது தான் கன்று நல்ல வளர்ச்சி, எடை மற்றும் ஆரோக்கியத்துடன் பிறக்கும். கன்று ஈன்ற பிறகு 100 சதவிகிதம் அளவு தீவனம் அளித்தால் போதுமானது.

(ஆதாரம் :www.milkproduction.com)

எருமையில் வேறுபட்ட இனங்களுக்கான தீவன அட்டவணை (கி.கிராமில்)

வ.எண்

எருமை இனம்

 

பசுந்தீவனம்

உலர்  தீவனம்

அடர் தீவனம்

1. முர்ரா (7-8 லி நாளொன்றுக்கு) பால் தரும் நாட்கள் 25-30 4-5 3.5-4.0
    பால் வற்றிய நாட்கள் 20-25 5-6 0.5-1.0
2. மெஹஸானா
(6-7 லி பால் நாளொன்றுக்கு)
பால் தரும் நாட்கள் 15-20 4-5 3.0-3.5
    பால் வற்றிய நாட்கள் 10-15 5-6 0.5-1.0
3. சுர்தி (5-6 லி பால் நாளொன்றுக்கு) பால் தரும் நாட்கள் 10-15 4.5 2.5-3.0
    பால் வற்றிய நாட்கள் 5-10 5-6 0.5-1.0

ஊட்டச்சத்துக்களின் தேவை

எருமைக் காளைகளுக்கான ஊட்டச்சத்துக்களின் அட்டவணை

எருமைக் காளையின் உடல் எடை (கி.கிராமில்)
செரிக்கக்கூடிய பண்படாத புரதம் கி. கிராமில் செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கி. கிராமில்
சாதாரண வேலை 4 மணி நேரம் கடின வேலை 8 மணி நேரம் சாதாரண வேலை 4 மணி நேரம் கடின வேலை 8 மணி நேரம்
300 0.227 0.241 3.06 3.89
350 0.254 0.277 3.56 4.50
400 0.283 0.287 4.00 5.03
450 0.307 0.335 4.40 5.60

(ஆதாரம்: www. vuatkerala.org)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024